இந்தி தெரிந்தால் தான் கடன்!: கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் திருச்சிக்கு பணியிடமாற்றம்..!!

அரியலூர்: இந்தி தெரிந்தால் தான் கடன் வழங்கப்படும் என்று கூறிய ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்ரமணியன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி. வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் படேல் என்பவர் மேலாளராக பணியில் இருந்துள்ளார். வங்கி மேலாளர், ஆங்கிலத்தில், உங்களுக்கு இந்தி தெரியுமா?  எனக் கேட்டுள்ளார். பாலசுப்ரமணியன் ஆங்கிலத்தில்  எனக்கு இந்தி தெரியாது.  ஆங்கிலமும் தமிழும் நன்கு தெரியும் என பதிலளித்துள்ளார்.  அதற்கு மேலாளர், தாம் மகாராஷ்டிராவில் இருந்து வருவதாகவும் தமக்கு இந்தி மட்டுமே தெரியும் எனக் கூறி ஆவணங்களைப் பார்க்காமல் இருந்துள்ளார். பாலசுப்ரமணியம் தனது ஆவணங்களைக் காட்டிய போதும் அவற்றை பாராமல் மொழி பற்றியே பேசி இந்தி தெரியாத உங்களுக்கு கடன் கொடுக்க முடியாது எனத் திரும்ப திரும்ப சொல்லி உள்ளார்.

இதனை தொடர்ந்து, தனது சுயமரியாதை இழக்கப்பட்டதால் மன உலைச்சலுக்கு ஆளான மருத்துவர் பாலசுப்ரமணியன், மொழி பிரச்சினை காரணமாக தமக்குக் கடன் அளிக்காத வங்கி மேலாளருக்கு நஷ்ட ஈடு கோரி நோட்டிஸ் அனுப்பியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தமிழர் உணர்வுடன் விளையாடாதீர் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தி தெரியவில்லை என்பதற்காக  ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரம் ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் விஷால் நாராயண் காப்ளே திருச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: