குடிநீர் ஆதாரமான முல்லைப்பெரியாற்றில் கழிவுநீரை கலக்குறாங்க: கூடலூர் நகராட்சி மீது கலெக்டரிடம் புகார்

தேனி: உத்தமபாளையம் தாலுகா, கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தலைவர் மொக்கப்பன் தலைமையில் பலர் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், குள்ளப்பக்கவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரியாற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் நகராட்சி கழிவுநீர் பெரியாற்றில் கலக்கப்படுகிறது. இதனால், கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோம்பை தென்னை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், கோம்பை நேச்சுரல் மெத்தட் கோக்கனெட் பிளாண்டர்ஸ் வெல்பேர் சொசைட்டி உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அம்சராஜ் தலைமையில் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோம்பை கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 1 உதவி மின்பொறியாளர், 5 வயர்மேன்கள், 2 போர்மேன்கள், 2 லைன்மேன்கள் மற்றும் 5 உதவியாளர்கள் இருந்தனர். இவர்கள், 112 டிரான்ஸ்பார்மர்களை பராமரித்து வந்தனர். தற்போது 3 வயர்மேன்கள் தவிர மற்றவர்கள் பணி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர். இதனால், கோம்பையில் ஏற்படும் மின்தடை பிரச்னைகளை 3 வயர்மேன்களால் விரைவாக செய்து முடிக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாளர்களை நிரப்ப வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

எலித்தொல்லையை தடுங்க...

தேனி மாவட்ட தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மவுலவி அப்துல்லாஹ் பத்ரி தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு எண் 400ல் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் நீரழிவு நோயாளிகளின் கால்களை கடிக்கிறது. இதில், பெரியகுளத்தை சேர்ந்த ஜமால்மைதீன் என்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

உடலில் கரிபூசி போராட்டம்

தேனி மாவட்ட சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் வீரணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் அன்பழகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, அனைவரும் உடம்பில் கரியை பூசிக்கொண்டு வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், ‘இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும், மருத்துவ சேர்க்கையில் இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும், ஒபிசி உள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். 2021 கணக்கெடுப்பில் ஓபிசி வகுப்பையும் சேர்க்கவும், சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவையும் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதன்விபரங்களை மத்திய அரசு உடனே வெளியிடவேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: