பிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 13 பேர் பலி: 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்பு

தானே: தானே மாவட்டம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தானே மாவட்டவம் பிவாண்டி நகரில் உள்ள ஜிலானி என்ற மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் தமங்கா நாக்கா அருகில் உள்ள நர்போலி பட்டேல் கம்பவுண்டில் உள்ளது. 43 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 40 வீடுகள் உள்ளன. 150 பேர் இந்த வீடுகளில் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 3.40 மணிக்கு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பலர் இடிபாடுகளில் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிகிக்கியவர்கள் மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

தகவலறிந்து தேசிய பேரிடர் பராமரிப்பு படையினரும், மீட்பு குழுக்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் பலியாகி விட்டனர். இதில் 7 பேர் குழந்தைகள் ஆவர். பலியான ஒரு குழந்தைக்கு இரண்டு வயது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இடிபாடுகளில் சிக்கியிருந்த இருந்த 20 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 வயது சிறுவன் உபேத் குரைசியும் ஒருவன். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆண்டு தோறும் மழைகாலத்துக்கு முன்பு பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் கட்டிடங்கள் ஆய்வு செய்து பாழடைந்த கட்டிடங்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிப்பார்கள். மிகவும் பாழடைந்த கட்டிடம் எனில் அதில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிகையாக வெளியேற்றப்படுவார்கள். ஆனால் இடிந்து விழுந்த ஜிலானி கட்டிடம் பாழடைந்த கட்டிடங்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் இரங்கல்

இடிந்த கட்டிடத்தின் உரிமையாளர் சையத் அகமத் ஜிலானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலியானவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. பிவாண்டி கட்டிட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

Related Stories: