கடவுள், மக்கள் மீது பழிபோடும் மோடி அரசு; தவறான ஆட்சி நிர்வாகம் குறித்து குற்றம் கூறுவதில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சில நேரங்களில் கடவுள், மக்கள் மீது குற்றம் சாட்டும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தங்களது தவறான ஆட்சி நிர்வாகத்தினை ஒரு போதும் குற்றம் சாட்டுவதில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் நேற்றைய நிகழ்வில் மக்களவையில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், `நாட்டில் கொரோனா தொற்று இந்தளவுக்கு பரவுவதற்கு பொதுமக்களின் அலட்சியம், பொறுப்பின்மையே காரணம்’ என்று கூறினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி அவரது நேற்றைய டிவிட்டர் பதிவில், ``மோடி அரசு ஆணவத்தில், நாட்டின் துயர நிலைக்கு சில நேரங்களில் கடவுளையும், சில நேரங்களில் மக்களையும் கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுகிறது. அதனுடைய தவறான கொள்கைகளையோ அல்லது ஆட்சி நிர்வாகத்தையோ ஒரு போதும் குற்றம் கூறுவதில்லை. இது போன்று, மோடியின் இன்னும் எத்தனை நடிப்புகளை நாடு பார்க்க போகிறதோ? என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், `கொரோனா என்பது கடவுளின் செயல். ஜிஎஸ்டி வருவாயில் கொரோனா காரணமாக மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது,’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: