கொலையாளிகளை கைது செய்யாத போலீசாரை கண்டித்து 3வது நாளாக கிராம மக்கள் சாலை மறியல்

செய்யூர்: செய்யூர் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில், குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாதததை கண்டித்து, உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், எஸ்பியின் பேச்சு வார்த்தையில் சமசரம் அடைந்த கிராம மக்கள் உடலை வாங்கி சென்றனர். செய்யூர் தாலுகா  இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் அதிமுக துணை தலைவர் அரசு (எ) ராமச்சந்திரன், கடந்த 19ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிமுக பிரமுகர் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள், அன்றிரவு கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் சமரசம் செய்து, அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், சூனாம்பேடு போலீசார் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக பாமக நிர்வாகிகள் 2 பேர் உட்பட 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து ராமச்சந்திரனின் உடல் சவ வாகனத்தில், அவரது சொந்த ஊரான கோழவாக்கம் பகுதிக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது.

ஆனால், 3வது நாளாகியும் கொலையாளிகளை போலீசார் கைது செய்யாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உடலை வாங்க மறுத்ததோடு சவ வாகனத்தை ஈசிஆர் சாலையில் நிறுத்தி 500க்கும் மேற்பட்டோர் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து எஸ்பி கண்ணன், சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினார். அப்போது,  சம்பந்தப்பட்டவர்களை, விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து  அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: