சுத்தம் குறித்த விழிப்புணர்வு சுற்றுச்சுவரில் வண்ண ஓவியம் வரையும் உள்ளூர் இளைஞர்கள்

குன்னூர்: வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து  சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் குன்னூரில் சுவர் ஓவியங்கள் வரைந்து நகரை பொலிவு படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் இருந்து பலர் சென்னை,மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் மென்பொருள் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பால், பலரும் மீண்டும்  சொந்த ஊருக்கே திரும்பிய நிலையில், கிளீன் குன்னூர் தன்னார்வ குழுவினருடன் இணைந்து குன்னூரை தூய்மையாக்குவதோடு பொலிவு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சாலையோரங்களில் உள்ள தடுப்புச்சுவர்களில், வன விலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியங்கள் வரைகின்றனர்.

இயற்கை சுற்றுச்சூழல், வன விலங்குகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் வரையும் ஓவியங்கள் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. மேலும் உள்ளுர் மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வார இறுதி நாட்களில் சாலையோரங்களில்  கொட்டப்படும் பழைய பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து நகராட்சியிடம் ஒப்படைத்து வருகிறோம். மேலும் நகராட்சிக்கு சொந்தமான பொது சுவரை பொலிவு படுத்தி ஒவியங்கள் வரைந்து  வருகிறோம். லாக்டவுன் நேரங்களில் எல்லோரும் இணைந்து பயனுள்ளதாக மாற்றி வருகிறோம். நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல்  நகரை சுத்தமாக வைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் எனக் கூறினர்.

Related Stories: