ஆரல்வாய்மொழியில் 80 அடி கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு; தீயணைப்பு துறையினர் அதிரடி

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில் 80 அடி கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான பூந்தோட்டம் புதிய நான்கு வழிச்சாலை அருகே உள்ளது. இத் தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்தின் அருகே விட்டிருந்தார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த மாடுகளில் ஒன்றை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பாபு பக்கத்து தோட்டத்திலும் பல இடங்களில் தேடினார். ஆனால் பசுமாடு கிடைக்கவில்லை, இந்நிலையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதியில் உள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து மாடு சத்தம் போடுவது கேட்டது.

கிணற்றில் எட்டி பார்த்த போது கிணற்றில் கிடந்த 20 அடி  தண்ணீரில் மாடு தத்தளித்து கொண்டிருப்பது தெரிய வந்ததும், உடனே அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டு மாட்டினை மேலே தூக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால் நாகர்கோவில் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் துரை மற்றும் நிலைய போக்குவரத்து அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்த மாட்டினை மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கிணற்றில் பக்க  சுவர்கள் இல்லாமலும் கிணற்றின் உட்பகுதி முழுவதும் செடிகளும்  புதர்களும் வளர்ந்து காணப்பட்டதால் மாட்டினை மீட்பதில் மிகவும் சிரமம்  ஏற்பட்டது. இருப்பினும் வீரர்கள் பல மணி நேரம் போராடி எந்த வித காயமும் இன்றி  மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

Related Stories: