குமரியில் மழை நீடிப்பதால் தனுஷ்கோடி வரை 4.2 மீட்டர் உயர பேரலைகளுக்கு வாய்ப்பு: கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 4.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.   இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக சிற்றார்-1ல் 42 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30.90 அடியாகும்.

அணைக்கு 632 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 521 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 65.85 அடியாகும். அணைக்கு 527 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று 3.5 மீட்டர் முதல் 4.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில்  வரும் 21ம் தேதி வரை மணிக்கு 55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: