மூன்று வேளாண் மசோதாவாலும் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்: அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர்: வேளாண் மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மசோதாவாகும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். திருவாரூரில் நேற்று அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சார்ந்த சட்ட மசோதாவில் ஒப்பந்த பண்ணை மசோதா என்பது ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மசோதாவாகும். இதேபோல் மார்க்கெட்டிங் மசோதா என்பது ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யும் முறை உள்ளது.

இது பஞ்சாப்பில் புதிய மசோதா என்பதால் அங்கு போராட்டம் நடைபெறுகிறது. மூன்றாவதாக அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா சட்டத்தில் உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை அதிக அளவில் இருப்பு வைப்பதற்கு வழிவகை  செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் செயற்கையாக விலை ஏற்றம் நடைபெறும்பட்சத்தில் அதில் அரசு தலையிட்டு விலையை குறைப்பதற்கு முடியும் என்பதால் மூன்று சட்ட மசோதாக்களுமே விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மசோதா  தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: