பழநி கோயிலில் 3 மொழிகளில் தகவல் பலகை கோயில் நிர்வாகம் முடிவு

பழநி :  தினகரன் செய்தி எதிரொலியாக பழநியில் 3 மொழிகளில் தகவல் பலகை வைக்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதுபோல் பழநி வரும் பக்தர்கள் விரைவில் சாமி தரிசனம் செய்ய வைப்பதாகக்கூறி பணம் கறக்கும் போலி கைடுகளின் நடமாட்டமும் அதிகளவு இருந்து வந்தது.

இவர்களிடமிருந்து பக்தர்களை பாதுகாக்க கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 160 நாட்களுக்கு மேல் பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த செப்.1ம் தேதியில் இருந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பின், பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கையாக அபிஷேகம்-  பூஜை பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் பழநி வரும் பக்தர்களிடம் சிலர் பூஜை பொருட்கள் வாங்க சொல்லியும், செருப்பு அணிந்து செல்லக்கூடாதென கூறி பக்தர்களை ஏமாற்றி பணம் கறந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஏமாற்று பேர்வழிகள் குறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பழநி கோயில் நிர்வாகம் சார்பில் நகர் முழுவதும் 3 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ், ஆங்கிலம் , மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன. இதில் பலகைகள் செருப்பு பாதுகாப்பு மையம் இருக்குமிடம், முடிக்காணிக்கை செலுத்துமிடங்கள், பூஜை பொருட்கள் அனுமதிக்கப்படாததன் விபரங்கள் உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட உள்ளன. கோயில் நிர்வாகத்தின் இந்நடவடிக்கை பொதுமக்கள், பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

Related Stories: