திருப்புவனத்தில் மஹாளய அமாவாசை பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு- காரைக்குடி, மானாமதுரையிலும் சிறப்பு பூஜை

திருப்புவனம் : கொரோனா கட்டுப்பாடுகளால் புரோகிதர்கள் வராததால் பக்தர்களே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருப்புவனத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுப்பதற்கு ஏராளமானோர் கூடுவார்கள். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில் சிரமம் ஏற்படும்.

ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால் மஹாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் திதி, தர்பணம் கொடுப்பதற்கும் சடங்குகள் செய்வதற்கும் புரோகிதர்களால் இயலாது என தெரிவித்திருந்தனர். நேற்று அதிகாலையிலேயே ஆற்றங்கரையில் கடைகள் அடைக்கவும் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கவும் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.

புரோகிதர்கள் வரவில்லை என்பதால் சில பக்தர்கள் ஆற்றில் அமர்ந்து அவர்களாகவே தர்ப்பணம் செய்தனர்.காரைக்குடியில் புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவிலூர், செக்காலை சிவன் கோவில் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் முன்னோர்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

மானாமதுரை அருகே உள்ள குறிச்சி பெரிய நாச்சியம்மான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அம்மாவாசையை முன்னிட்டு காசியில் இருந்து கங்கை புனித நீர் கொண்டு வந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று காலை முதல் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டது. பின்னர் தர்ப்பணம் முடிந்த பிறகு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது. தர்ப்பணம் கொடுத்தவர்கள் புனித நீரை சிவலிங்கத்திற்கு ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Related Stories: