கொடைக்கானலில் களைகட்டும் ‘ஆப் சீசன்’ மனதைக் கவரும் செர்ரி பிளாசம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆப் சீசனை வரவேற்கும் விதமாக பூத்துள்ள செர்ரி பிளாசம் பூக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. ஆப் சீசன் என அழைக்கப்படும் இந்த சீசனில் பூக்கக்கூடிய செர்ரி பிளாசம் மலர்கள் தற்போது மலைப்பகுதி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றன. மர வகையை சேர்ந்த இந்தப்பூ உள்ள மரங்களில் இலைகளை விடவும், பூக்களே அதிகம் இருக்கும்.  பார்ப்பதற்கு அழகாக ரோஸ் நிறத்தில் இருக்கும் இப்பூக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

 இந்தியாவில் இமயமலை அடிவார பகுதி மாநிலங்களான உத்தரகாண்ட், ஜம்மு- காஷ்மீர், சிக்கிம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் இப்பூக்கள் அதிகளவில் காணப்படும். இந்தியில் இப்பூவை பத்மஹஸ்தா என அழைக்கின்றனர்.

 ஜப்பான் நாட்டில் இந்த செர்ரி பிளாசம் பூக்கள் பூக்கும் காலங்களில் சிறப்பு விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இப்பூ மரங்களை கொடைக்கானல் நகர், வனப்பகுதிகளில் அதிகம் நட வேண்டும் என்றும், அதன்மூலம் நகரின் அழகை இன்னும் மெருகூட்டலாம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். செர்ரி பிளாசம் பூக்கும் இந்த செப்டம்பர் மாதத்தில் விழா கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

காரில் போறீங்களா? இ-பாஸ் கட்டாயம் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி அறிவித்திருந்தார். பஸ்களில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு. தனியார் வாகனங்களில் குறிப்பாக கார், வேன், டூவீலர்களில் வருபவர்கள் கலெக்டரிடம் இ-பாஸ் பெற்றுதான் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப். 1 முதல் இதுவரை கொடைக்கானலுக்கு செல்ல 8,600 பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து செல்லலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: