புட்லூரில் விவசாய பண்ணையும் விதை பண்ணையும் அமைக்கப்படுமா? பூந்தமல்லி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கேள்வி

திருவள்ளூர்:  பூந்தமல்லி தொகுதி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பூந்தமல்லி தொகுதியில் புலியூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரைக்கும்தான் நெல் கொள்முதல் செய்ய முடியும் என்றும், இப்போது நெல் கொள்முதல் செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பக்கத்து தொகுதியான கும்மிடிப்பூண்டி தொகுதியில் காதர்வேடு கிராமத்திற்கு நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் அனுப்பப்படுகிறார்கள்.

அங்கே காதர்வேடு கிராமத்திற்கு போகின்றபோது எங்கள் தொகுதி சார்ந்தவர்களை புறக்கணித்து வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக என்னிடம் புகார் வந்தன. எனவே சூழ்நிலையை மாற்றியமைப்பதற்காக புலியூர் கிராமத்தில் ஆண்டு முழுவதுமாக நெல் கொள்முதல் செய்வதற்கு குடோன் கட்டித்தர வேண்டுமென்று  கேட்டுக்கொள்கிறேன். மேலும் புட்லூர் கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் விவசாய பண்ணை நீண்ட நாளாக  கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அங்கு விவசாய பண்ணையும், விதை பண்ணையும் அமைக்க வேண்டும் என்றார்.

உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதில் அளித்து பேசும்பொழுது, இந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அந்த 21 நோடி நெல் கொள்முதல் நிலையங்களும் இயங்கி கொண்டிருக்கின்றன. அதன்மூலம் 33 ஆயிரத்து 152 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.  உறுப்பினர், சொன்ன புலியூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை குறித்து ஆய்வு செய்து  முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றித் தரப்படும் என்று இந்த நேரத்தில் போவை துணைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வேளாண்மைத் துறையைச் சார்ந்த ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அதுகுறித்து  வேளாண்மைத் துறை அமைச்சருடன் கலந்து பேசி அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

Related Stories: