வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் 10 மணி நேரம் ரெய்டு

உத்தமபாளையம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் தொடர்பாக, அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் வீடு மற்றும் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 10 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன்(40). தேனி மாவட்டம், குச்சனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட ஊர்களில் செயல் அலுவலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைமுகமாக தகவல்களை திரட்டினர். சென்னை விஜிலென்ஸ் கமிஷனர் உத்தரவின் அடிப்படையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து உத்தமபாளையம், தர்மர் கோயில் தெருவில் உள்ள பாலசுப்பிரமணியனின் வீட்டிற்கு, தேனி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை 7 மணிக்கு வந்தனர். அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்ட ஆவணங்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டன. சில சொத்து பத்திரங்களையும் கைப்பற்றினர்.

இதன் பின்பு மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கர் ஒன்றை சோதனை செய்தனர். இதன்பின்பு 10 மணி நேரமாக நடந்த சோதனையை முடித்துவிட்டு அதிகாரிகள் கிளம்பி சென்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகாரில் குறிப்பிட்ட காலத்தை முன்வைத்து விசாரணை நடக்கும். இதன்பின்பு தான் இவர் மீதான புகார் உண்மையானதா அல்லது வேறு உள்நோக்கத்துடன் தரப்பட்டதா என தெரியவரும்’’ என்றனர்.

Related Stories: