தொழிற்சாலை இயங்காததால் வேலைவாய்ப்பும் இல்லை இந்தியாவில் வரி விதிப்பு மிக அதிகம் தொழில் விரிவாக்கம் இனி கிடையாது

புதுடெல்லி: எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல் உட்பட பல துறைகளிலும் இந்தியா உற்பத்தி மையமாக திகழ வேண்டும் என்பதைத்தான் மத்திய அரசு பல சந்தர்ப்பங்களில் தாரக மந்திரமாக கூறி வருகிறது. ஆனால், நடைமுறையில் வரி விதிப்புகள் அதிகம் உள்ளதாகவும், இதனால் தொழில் செய்வது சிரமமாக உள்ளது எனவும் தொழில் நிறுவனங்கள் தரப்பில் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், இனி தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு இடமே இல்லை என்று டொயோட்டா நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.  உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான டொயோட்டா, 1997ல் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது. ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு புள்ளிவிவரப்படி, சிறிய கார்கள் சந்தையில் டொயோட்டாவின் பங்களிப்பு 2.6 சதவீதம் மட்டுமே. இது கடந்த ஆண்டு 5 சதவீதமாக இருந்தது.

 டொேயாட்டா கிர்லோஸ்கர் மோட்டார்சின் துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் கூறுகையில், கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகளுக்கு மத்திய அரசு மிக அதிக வரி விதிக்கிறது. இதை அளவிட இயலவில்லை. அதிக வரிவிதிப்பால் கார்கள் வாங்குவது பல வாடிக்கையாளர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.  விற்பனை சரிந்ததால் தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக சாத்தியமில்லாமல் போய்விட்டது. கார் உற்பத்திக்காக அதிக தொகையை இங்கு முதலீடு செய்த பிறகு, எங்களுக்கு நீங்கள் தேவையில்லை என்ற தகவல்தான் கிடைத்துள்ளது. தொழில்துறைக்கு ஏற்ற சீரமைப்புகள் இல்லை. இதற்காக நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதில்லை. அதேநேரத்தில், விரிவுபடுத்தவும் போவதில்லை என கூறியுள்ளார்.

 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்து வரும் சூழ்நிலையில், வரிச்சுமையை சுட்டிக்காட்டி கார் நிறுவனம் அதிருப்தியை வெளிப்படுத்தியது மத்திய அரசின் உள்நாட்டு உற்பத்தி திட்டங்களுக்கு தோல்வியாக கருதப்படுகிறது என தொழில்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.

 சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2017ல் வெளியேறியது. இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த போர்ட் மோட்டார்ஸ், மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரியால் விழிபிதுங்கும் நிறுவனங்கள்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், வரிகள் அதிகமாக இருப்பதால் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரை மோட்டார் வாகனங்களுக்கு  (பேட்டரி வாகனங்கள் தவிர) ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. இது தவிர இன்ஜின் மற்றும் வாகன அளவு, ரகத்துக்கு ஏற்ப கூடுதலாக ஒரு சதவீதம் முதல் 22 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. 4 மீட்டர் நீளமுள்ள, 1500 சிசிக்கு அதிக இன்ஜின் கொண்ட எஸ்யூவிக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

Related Stories: