சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பு கருத்து ஏடிஜிபி மீது நடவடிக்கை கோரி முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:

பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கக்கூடாது என்பதும் ஒன்று. தமிழக அரசின் கீழ் ஏடிஜிபியாக பணியாற்றிவரும் சந்தீப் மிட்டல் தனது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து இயங்குகிறார். இந்த பக்கம் அதிகாரப்பூர்வமான ஒன்று. டிவிட்டர் வெரிபிகேஷன் பெற்றது. இந்த பக்கத்தில் அவர் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆகஸ்ட் 23ம் தேதி, இடதுசாரிகளும் இஸ்லாமிய கருத்து கொண்டவர் களும் இந்த நாட்டின் வரலாற்றை பல நூற்றாண்டுகளாக வல்லுறவு செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 2ம் தேதி புதிய கல்விக்கொள்கை கம்யூனிஸ்டுகளையும், கடும் இஸ்லாமியர்களையும் சலசலக்க செய்ய 3 காரணங்கள் என்ற கருத்துடன் ஒரு கட்டுரையை பகிர்ந்திருந்தார். வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர் அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு நோக்கம் கற்பிக்கும் பதிவினை ஜூலை 13ம் தேதி மேற்கொண்டுள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் கொரோனா கால நிவாரணம் வலியுறுத்தி நடத்திய மக்கள் போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பித்தும் பதிவு மேற்கொண்டுள்ளார்.

அவருடைய டிவிட்டர் பக்கத்தை படிக்கும் போது அவரின் பதிவுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புக்களை சார்ந்தவையாக இருக்கின்றன. இந்திய குடிமக்களுக்கு அவரவர் விரும்பும் அரசியலை தேர்வு செய்திட ஆதரிக்க உரிமை உண்டு. ஆனால், பதவியில் உள்ள அதிகாரி அதனை மேற்கொள்ளும் போது கடமை தவறியவராகிறார். சீருடைப்பணியாளர்களுக்கான நடத்தை விதிப்படியும், சட்டப்படியும் அவருடைய செயல்பாடுகள் தண்டனைக்குரியவையாகும். இவரின் பதிவுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானதாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. எனவே, இவர் பதவியில் நீடிப்பதற்கு தகுதி அற்றவர். இவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய அதிகாரி, சந்தீப் மிட்டல், கூடுதல் எஸ்பியாக பணியில் இருந்தபோது லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளானார். 2011ல் பரமக்குடியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஊர்வலம் சென்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அப்போது, இவர் ராமநாதபுரம் டிஐஜியாக இருந்தார். இவரும், பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் சேர்ந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தன. அதில் 6 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சிபிஐ வழக்குப்பதிந்து விசாரித்தது. அதில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சில மாதங்கள் முன் வரை பணியாற்றிய என்ஐசிஎப்எஸ் என்ற பயிற்சி மையத்தில் 2 போலீசார் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு இவரது நெருக்கடிதான் காரணம் என்று புகார் கூறப்பட்டது. ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசுக்கு திரும்பி உள்ளார். எனினும் தமிழக பணியில் சேராமல் விடுமுறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: