நெல்லை மாவட்ட கால்வாய்களில் காலம் கடந்து தண்ணீர் திறந்ததால் நடுவை தொடங்காத விவசாயிகள்

நெல்லை: இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தேவையான அளவு நெல்லை மாவட்டத்தில் பெய்யவில்லை. அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பில் இல்லை. இதனால் வழக்கமாக ஜூன் மாதம் 1ம்தேதி அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் நடுவை செய்ய தயார் நிலையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் நீருக்காக காத்திருந்தனர். ஜூலை மாதமும் தண்ணீர் திறக்கப்படவில்லை. 2 மாதங்கள் கடந்த பின்னர் மிகவும் காலதாமதமாக பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

அதுவும் குறிப்பிட்ட கால்வாய்களுக்கு மட்டும் தண்ணீர் வந்தது. தண்ணீர் திறப்பதற்கு முன்னர் கால்வாய்கள் தூர்வாரபடாததால் ஆங்காங்கே தண்ணீர் செல்வதில் தடையும் ஏற்பட்டது. தடைகளை தாண்டி வந்த தண்ணீர் சில குளங்களுக்கு பாய்ந்துள்ளது. அதே நேரத்தில் நெல் நடவு பணிகளை பெரும்பாலான விவசாயிகள் தொடங்கவில்லை. வாழை போன்ற பிற பயிர்களுக்கு இந்த தண்ணீர் பயன்பட்டாலும் நெல் நடவு முழுமையாக நடைபெறாததால் பெரும்பாலான நிலங்கள் இப்போதும் மைதானம் போல் காய்ந்து காட்சி அளிக்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காலத்தே பயிர் செய் என்பதை பின்பற்றாவிட்டால் நஷ்டம் ஏற்படுவது இயற்கை.

ஜூன் 1ம்தேதி தண்ணீர் திறந்தால்தான் நாற்று நட்டு பயிரை குறிப்பிட்ட நாட்களில் வளர்த்து அடுத்த அக்டோபர், நவம்பர் மழை சீசனுக்கு முன்னதாக பாதகமின்றி அறுவடை செய்யமுடியும். ஆனால் இந்த முறை மிகவும் தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பயிர் செய்தால் அறுவடைக்கு மழை காலத்தை கடந்துவிடும். அதன் பின்னர் அடுத்த பயிர் சாகுபடி ெசய்யமுடியாது. இதனால்தான் பல விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர் என்றனர்.

Related Stories: