வாடகை உயர்த்தி வழங்ககோரி லாரி உரிமையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி அருகே செட்டிநாடு நிலக்கரி கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் சென்னை, கும்மிடிப்பூண்டி, ஆந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையில், சென்னையில் இருந்து நிலக்கரி கிடங்கிற்கு பொருட்களை ஏற்றிவரும் லாரிகள் திரும்பிச் செல்லும்போது காலியாக இருக்கும். இதனை பயன்படுத்தி இங்கிருந்து நிலக்கரியை குறைந்த வாடகைக்கு லாரி உரிமையாளர்கள் எடுத்துச் செல்கின்றனர். இதனால் இந்நிறுவனத்தை சுற்றியுள்ள எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதி டிப்பர் லாரி உரிமையாளர்கள் பாதிப்பட்டனர்.

இந்நிலையில், உள்ளூர் டிப்பர் லாரிகளுக்கு கம்பெனி நிர்வாகம் குறைந்த வாடகை கொடுக்கிறது. இதனால் டிரைவர் சம்பளம், லாரி தேய்மானம், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைகளால் நஷ்டம் ஏற்படுகிறது. வாடகை உயர்த்தி வழங்க வேண்டும். வெளி ஆட்களுக்கு நிலக்கரி லோடு கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று கம்பெனி நுழைவு வாயில் முன்பு எண்ணூர், காட்டுப்பள்ளி பகுதி டிப்பர் லாரி உரிமையாளர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, டிப்பர் லாரிகளுக்கு வாடகை உயர்த்தி தரவேண்டும். நிரந்தரமாக லோடு வழங்க வேண்டும் என கம்பெனி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுசம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கம்பெனி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை ஏற்று இந்த போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அசிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   

Related Stories: