விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் லத்தியால் தாக்கியதில் வாலிபரின் மணிக்கட்டில் முறிவு: மருத்துவமனையில் அட்மிட்

பெ.நா.பாளையம்: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் விசாரணைக்கு வருமாறு அழைத்து சென்று போலீசார் லத்தியால் தாக்கியதில் மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக வாலிபர் புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கண்ணன் (35). கட்டிட தொழிலாளி. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியில் கண்ணன் தங்கியிருந்தார், கொரோனா காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் முருகவேல் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணனை எழுப்பிய போலீசார் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு போலீசார் அடித்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நாய்க்கன்பாளையம் கோவனூர் பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன் நடந்த கொலைக்கு குற்றவாளி என ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய போலீசார், லத்தியால் அடித்தும், காலால் உதைத்தும் சித்ரவதை செய்ததாக கண்ணன் மாவட்ட எஸ்.பி. அருளரசுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

போலீசார் லத்தியால் தாக்கியதில் தனது இடது கை மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு, ஷூ காலால் எட்டி உதைத்ததால் கால் வீங்கியதன் காரணமாக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் அந்த புகாரில் கூறி உள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,`கண்ணன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதும், கொலை நடந்த நேரத்தில் அந்த இடத்தில் இவர்கள் செல்போன் எண்களில் பேசியதும் தெரியவந்ததை தொடர்ந்தே விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போதே காலில் காயத்துடன் நடக்க முடியாமல் தான் கண்ணன் காவல்நிலையம் வந்தார்’ என்றனர்.

Related Stories: