விழுப்புரத்தில் கிசான் திட்ட முறைகேடு பூதாகரம் : ஒரு லட்சத்து 12 ஆயிரம் போலி பயனாளிகள் கண்டுபிடிப்பு!!

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசின் உழவர் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக வேளாண் அலுவலக பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கிசான் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 12 ஆயிரம் போலி பயனாளிகள் முறைகேடாக பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து இதுவரை 7 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வல்லம் ஒன்றிய வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் பணியாற்றிய வெங்கடேசன், பழனிக்குமார், குஸ்புராஜ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, கிசான் நிதியுதவி திட்டத்திற்கான கடவு சொல்லை அதிகாரிகள்தான் கொடுத்தார்கள் என அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் போலி பயனாளிகளிடம் பெற்ற பணத்தை அதிகாரிகளிடம் தந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வேளாண்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் விரைவில் மோசடியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி., தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: