ராணுவத்தை காட்டி மிரட்டுவது நாங்கள் அல்ல நீங்கள் தான்...அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

பீஜிங்: ‘ராணுவ பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துவது நாங்கள் அல்ல; நீங்கள்தான்,’ என்று அமெரிக்கா மீது சீனா குற்றம்சாட்டி உள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று வருடாந்திர அறிக்கை வெளியிட்டது. 200 பக்கம் கொண்ட இந்த அறிக்கையில், சீன ராணுவம் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தது. ‘இந்தியா, பூடான் போன்ற அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. கிழக்கு மற்றும் தென் சீனக்கடல் எல்லைப் பகுதியிலும் அச்சுறுத்தி பணிய வைக்கும் யுக்தியைக் கையாண்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளின் அமைதிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது,’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக தனது ராணுவ பலத்தை சீனா கட்டமைத்துக் கொண்டிருக்கிறது என்றும் கண்டித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலோனல் வு கியான் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், ‘சர்வதேச அமைதிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் அமெரிக்காதான் நடந்து கொள்கிறது. அது தனது ராணுவ பலத்தை காட்டி உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டதால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.  பல லட்சம் மக்கள் அகதிகளாகி விட்டனர். பென்டகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சீனாவைப் பற்றி அவதூறான தகவல்கள் உள்ளன. சீனாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்றவாறே ராணுவ பலம் வடிவமைக்கப்படுகிறது. இதை அமெரிக்கா நேரில் வந்தும் பார்வையிடலாம்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: