நட்சத்திர ஓட்டலில் கேரள அமைச்சர் மகனுக்கு சொப்னா கொடுத்த லஞ்சம்: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் ராணி சொப்னாவுடன் கேரள அமைச்சரின் மகன் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலமாக தங்கம் கடத்திய சம்பவத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே, இந்த வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தேசிய  புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகிய 3 அமைப்புகளும் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. இதில், தங்க கடத்தல் கும்பலுடன் கேரள ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருப்பது வெளியானது.

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல், அமீரக தூதகர பார்சலில் இஸ்லாமிய மத நூல் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சல்களில் மத நூல் மட்டுமின்றி, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் கடத்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுவதால் ஜலீலிடம் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் விசாரித்தது. இதற்கிடையே, சொப்னாவுக்கும், கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சொப்னாவுடன் கேரள அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

துபாயில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம், கேரள அரசின் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் ‘லைப்  மிஷன்’ திட்டத்துக்கு ரூ.20 கோடி நன்கொடை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தை பெற்ற 2 கேரள நிறுவனங்கள், ரூ.4 கோடியை கமிஷனாக கொடுத்துள்ளன. இதை சொப்னா பங்கு போட்டு கொடுத்துள்ளார். இதில், ஒருவர் கேரள அமைச்சரின் மகன் என தெரியவந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சொப்னா அந்த பணத்தை அமைச்சரின் மகனுக்கு கொடுத்துள்ளார். இதில், ஒருவர் இடைத்தரகராகவும் செயல்பட்டுள்ளார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் விசாரணை அமைப்புகளிடம் சிக்கியுள்ளது.இது பற்றி அமைச்சரின் மகனிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Related Stories: