ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்த கோவை போலீசார்: கள்ளிக்குடி பெண் அதிர்ச்சி

திருமங்கலம்: கள்ளிக்குடியில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என கோவை மாநகர போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அடுத்துள்ள அகத்தாபட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). டிரைவர். இவரது மனைவி சங்கவி (24). இருவருக்கும் தனித்தனியாக டூவீலர் உள்ளது. இந்த நிலையில், சங்கவியின் செல்போனிற்கு நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் கோவை மாநகர போலீசிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், இன்று காலை (நேற்று முன்தினம்) 11 மணியளவில் ஹெல்மெட் டூவீலரில் சென்றதால் உங்களுக்கு அபராதம் ரூ.100 விதிக்கப்பட்டுள்ளது.

இதனை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கவி, ராமச்சந்திரன் இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் தெரிவித்தனர். குறுஞ்செய்தியை பார்த்து குழம்பிய கள்ளிக்குடி போலீசார், கோவை போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதற்கு பதிலளித்த போலீசார், யாரோ வண்டி எண்ணை மாற்றி கூறியிருக்கிறார்கள். அதனால் எழுந்த குழப்பம் என கூலாக கூறவே கள்ளிக்குடி போலீசார் மற்றும் ராமச்சந்திரன் தம்பதி நொந்து போகினர்.

இது குறித்து ராமச்சந்திரன் கூறுகையில், ‘கோவைக்கும்-கள்ளிக்குடிக்கும் 280 கி.மீ தூரமுள்ளது.

எனது மனைவி கோவைக்கு செல்லவில்லை. அதுவும் கடந்த 10 தினங்களாக அவர் டூவீலரை வெளியே எடுக்கவில்லை. கோவை போலீசாரின் கடமை உணர்சிக்கு அளவில்லாமல் போய்விட்டது. இதனால் எங்களுக்கு மன உளைச்சல் உண்டானதுதான் மிச்சம்’ என்றார்.

Related Stories: