நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட பா.ம.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது: விழுப்புரம் தனிப்படை போலீசார் அதிரடி

விழுப்புரம்: மணல் கடத்தலில் ஈடுபட்ட பாமக பிரமுகரும், ஊராட்சி தலைவரின் கணவர் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லாரிகள்,  பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம், கடலூர் மாவட்ட தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் படுஜோராக நடந்து வருகின்றது. கடலூர் மாவட்டம் பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றிலிருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, லாரிகள் மூலம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு மணல் கடத்துவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தின் வழியாகவே திருட்டு மணல் கொண்டு செல்லப்படுவதாகவும் எஸ்பி ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எஸ்பியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் ஜனாகிபுரம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். ஆனால், மற்றொரு லாரி, உளுந்தூர்பேட்டை மார்க்கமாக மின்னல் வேகத்தில் சென்றது. பின்னர், தனிப்படை போலீசார், ஜீப்பில் துரத்திச் சென்று அரசூரில் மடக்கிப் பிடித்தனர்.

அந்த லாரியை திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திலும், ஜானகிபுரத்தில் பிடிபட்ட லாரியை தாலுகா காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். லாரியை ஓட்டிவந்தது பைத்தாம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ்(28), வீரமணி(29), வெங்கடாஜலபதி(36) என்பதும் பைத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும், பாமக பிரமுகருமான ராஜ்குமார்(39) என்பவருக்கும் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே, 3 பேர் மற்றும் ராஜ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, விழுப்புரம் அருகே பில்லூரில் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த, அய்யப்பன்(35) என்பவரையும் இரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மணல் கடத்தலில் அதிமுக பிரமுகர் கார் சிக்கியது எப்படி?

கைதான பாமக பிரமுகர் ராஜ்குமார், இரண்டு லாரிகளுக்கு முன்பாக, காரில் எஸ்கார்டு பார்ப்பது வழக்கம். போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, தனக்குத் தெரிந்த அதிமுக பிரமுகரின் காரை வாங்கி கட்சிக்கொடியும், வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டி ஓட்டிச்செல்கிறாராம். இதனை அறிந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து, காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: