காவல்துறையில் மனிதநேயம் பசியால் மயங்கிய மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் பசியால் மயங்கிய மூதாட்டியை, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். ராஜகோபால் பூங்கா அருகே சென்றபோது, சுமார் 80  வயது மதிக்கத்தக்க மூதாட்டி, பசியால் நடக்க முடியாமல் தடுமாறி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவர், அந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை  அளித்து, குடிநீர் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்தார். விசாரித்ததில் அவர் தர்மபுரி வெளிப்பேட்டை தெருவைச் சேர்ந்த லட்சுமி (80) என்பதும், அவரது  கணவர் 20 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதும் தெரியவந்தது. அவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சொத்து பிரச்னையில், மகன்கள்  மற்றும் மகள்களால் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு விட்டார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், தர்மபுரி தாசில்தாராக இருந்த சுகுமார் உதவியுடன் சோகத்தூர் முதியோர் காப்பகத்தில்  சேர்க்கப்பட்டார். ஆனால், மகன்களின் கவுரவ பிரச்னை காரணமாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மீண்டும்  பிள்ளைகளால் விரட்டியடிக்கப்பட்டதால், சாலையில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று உணவு கிடைக்காததால், மயங்கி சரிந்த  மூதாட்டியை, சோகத்தூர் மெர்சி ஹோமில் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஒப்படைத்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவு,  பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூதாட்டியின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: