வேளாண் அதிகாரி அலட்சியம் உழவன் செயலியில் நெல் இருப்பு என தகவல்: விவசாயிகள் நேரில் சென்றால் இல்லை என கைவிரிப்பு

மயிலாடுதுறை: உழவன் செயலியில் ஏடிடி 46 ரக விதைநெல் இருப்பு காட்டிய நிலையில் அதிகாரிகள் இல்லை என மறுத்ததால் விவசாயிகள்  அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இருப்பில் உள்ள விதைநெல்லை விவசாயிகளிடம் திணிப்பதாக குற்றச்சாட்டும் கூறுகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது தாளடி சாகுபடி முன்பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக தங்கள் வயல்களை உழுது தயார் செய்து வரும்  விவசாயிகள், உழவன் செயலி மூலம் மயிலாடுதுறை சேமிப்பு கிடங்கில் ஏடிடி 46 ரக விதைநெல் 4190 கிலோ இருப்பு இருப்பதை அறிந்து  மயிலாடுதுறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியுள்ளனர்.இந்த ரக நெல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் ரூ.28க்கும், மானியம் இல்லாமல் ரூ.37க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

இந்நிலையில், மானிய விலையிலான ஏடிடி 46 ரக விதைநெல் இருப்பு இல்லை எனவும், மானியம் இல்லாத விதைநெல் மட்டுமே  இருப்பு உள்ளதாகவும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரக விதைநெல் தனியாரிடம் முதல் தரமான விதைநெல்லே 35  ரூபாய்க்கு கிடைக்கிறது.எனவே, ஏடிடி 46 ரக விதைநெல்லை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உழவன் செயலியில்  முதலில் 4 டன் விதை நெல் இருப்பு காட்டிய போது நெல் இருப்பு இல்லை என அதிகாரிகள் மறுத்ததாகவும், இரண்டு நாள்கள் பின்னர் பார்க்கும்போது  இருப்பு 600 கிலோ மட்டுமே காட்டுவதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள், தங்கள் நிலத்தில் நன்றாக விளையும் விதைநெல்லை தாங்கள்  கேட்கும்போது, வேளாண்மைத்துறை அதிகாரிகள் தங்களிடம் இருப்பில் உள்ள விதை நெல்லை விவசாயிகளிடம் திணிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, வட்டார வேளாண் இயக்குநர் கூறுகையில், ஏடிடி 46 ரக விதைநெல் இருப்பு இல்லை, இனி அடுத்த ஆண்டுதான். இந்த ரக விதைநெல்  வரும் என்றும், உழவன் செயலியில் அப்டேட் செய்யப்பட்டிருக்காது என்றும் தற்போது கோ 50 ரக நெல் சுமார் 10 டன் மட்டுமே இருப்பில் உள்ளதாக  கூறினார்.

Related Stories: