தமிழகத்தில் காவிரி படுகையில் மீதமுள்ள எண்ணெய் கிணறுகளை தோண்ட மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

புதுடெல்லி: ‘காவிரி டெல்டா பகுதிகளில் மீதமுள்ள எண்ணெய் கிணறுகளின் பணியை முடிக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள  சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்,’ என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.  இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளில், தமிழகத்தில் உள்ள  காவிரிப்  படுகையும்  ஒன்றாகும். இங்கு, எண்ணெய், இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணியை 30 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு தொடங்கி விட்டது.  நெடுவாசலில் கடந்த 2006ம் ஆண்டே பூமி துளையிடப்பட்டது. இதனால், 21 லட்சம் ஏக்கர் நிலம் பாழாகி விடும் என கண்டு பிடிக்கப்பட்டதால்  பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, ஓஎன்ஜிசி.யின் அந்த திட்டத்தை கைவிட வைத்தனர்.

தமிழக காவிரி படுகையில் 24 இடங்களில் எண்ணெய்கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல்  அனுமதியை, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அதன் நிபுணர் குழு பரிந்துரை  செய்துள்ளது. அதில்,  ‘தமிழகத்தில்் திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 24 இடங்களில் எண்ணெய் கிணறு  தோண்ட ஓஎன்ஜிசி.க்கு கடந்த 2013ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் போராட்டம், இடத்தின் சூழல் ஆகிய காரணங்களால்  16  கிணறுகளின் பணிகள் மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அதனால், மீதமுள்ள 8 ஆழ்துளை கிணறு பணிகளையும் முடிக்க மேலும் 3 ஆண்டுகள் அதாவது 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதிவரை கூடுதல்  அவகாசம் வழங்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

 இதை ஏற்று  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கும் பட்சத்தில், மீதமுள்ள 8 ஆழ்துளை எண்ணெய் கிணறுகளை தோண்டும் பணியை  ஓஎன்ஜிசி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* எண்ணெய் எடுப்பதற்காக காவிரிப் படுகை பூமி சல்லடையாக துளைக்கப்படுவதால், நில நடுக்கம் அபாயம் அதிகரிக்கும்.

* ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் பணி புரிய வரும் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தமிழத்தில் குடியேற வாய்ப்பு அதிகம் உள்ளது.

* இந்த திட்டம் தமிழர்களின் கலாச்சாரத்தை உடைப்பது மட்டுமின்றி, அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாரத்தையே அழித்து விடும் என, இத்திட்ட  எதிர்ப்பாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Related Stories: