ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, மகளிர் அணி செயலாளர் கனிமொழி, தங்கம்தென்னரசு, பூச்சிமுருகன், சிற்றரசு, மக்கள் விடுதலை கட்சித் தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் தனது 18வது வயதில் கைதாகி- தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய இளைஞர். தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கல்வி - அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய அவருக்கு, 2010ல் திமுக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த நேரத்திலும்- மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கேற்றிருந்த காலகட்டத்திலும்தான் தபால் தலை வெளியிடப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, “தேவேந்திரகுல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்று இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம். இந்த கோரிக்கையை உரிய முறையில் பரிசீலனை செய்து, அதற்கு தக்கதொரு தீர்வினை விரைவில் கண்டிட வேண்டும் என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் - மத்திய அரசையும் தொடர்ந்து திமுக வலியுறுத்தும் என்ற உறுதியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசும், அதிமுக அரசும் இதுவரை அமைதி காக்கிறது. ஆகவே, கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: