சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் நம்மை அழவைத்து சென்று விட்டார் மத்திய, மாநில அரசுகள் மக்களை கைகழுவி விட்டன: வசந்தகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமி ழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான மறைந்த எச்.வசந்தகுமாருக்கு காணொலி காட்சி மூலம் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக சார்பில் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர்.  நிகழ்ச்சியை காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா ஒருங்கிணைத்து வழங்கினார். விஜய் வசந்த் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றியதால் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.அன்பழகனை இழந்ததைப் போல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரையும் இழந்திருக்கிறோம். சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர் முதன்முதலாக நம்மை எல்லாம் அழ வைத்து விட்டுச் சென்றுவிட்டார். இந்த நாட்டு இளைஞர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ கருத்துகள் அவரது வாழ்க்கையில் உண்டு. அவரது வாழ்க்கை  மட்டுமல்ல, மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.   மத்திய அரசும் மாநில அரசும் மக்களை கைகழுவி விட்டன. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.

சுகாதார உதவியும் இல்லை, பொருளாதார உதவியும் இல்லை, தார்மீக உதவிகளும் இல்லை என்ற நிலையில் மக்களை மத்திய மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன.

 இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரது மரணம் அதிக வருத்தத்தை அளிக்கிறது, அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் மகன்கள், மகள் ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது சகோதரரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் தமிழ்ச் சுரங்கமுமான குமரி அனந்தனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: