'லடாக் எல்லையில் நீடிக்கும் மோதல் போக்கிற்கு நிரந்தர தீர்வு' : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு!

ரஷ்யா:  லடாக் எல்லையில் நீடிக்கும் மோதல் போக்கிற்கு 5 அம்ச திட்டம் மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் சீனா ஒப்புக்கொண்டுள்ளனர். இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சீன ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் ஏராளமான இந்திய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இரு நாட்டு வீரர்களும் தங்கள் எல்லைக்குள்தான் இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டதை அடுத்து, கடந்த திங்கள் அன்று லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம், எல்லை தாண்டிச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனத் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், `நாங்கள் எல்லை தாண்டவில்லை’ என்று தெரிவித்த இந்திய ராணுவம், `சீன ராணுவம்தான், வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டது’ என்றும் குற்றம்சாட்டியது. இதனையடுத்து, எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பாங்காங் சோ ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்த நிலையில், தொடர்ந்து எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதனால் மோதலுக்கு நிரந்தர தீர்வு காண 5 அம்ச திட்டம் மூலம் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கவுன்சில் மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லடாக் எல்லையில் சீன இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர் படைகளை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் எல்லையில், முந்தைய நிலை தொடர வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, பேச்சுவார்த்தை இறுதியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 5 அம்ச திட்டம் மூலம் எல்லையில் மீண்டும் அமைதி ஏற்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இராணுவரீதியான பேச்சுவார்த்தையை தொடர, வீரர்கள் முகாம்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தவும், படைகள் அனைத்தும் வாபஸ் பெற்று பதற்றத்தை குறைக்கவும், இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர். முன்னதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லெர்ஷி ஜாவ்ரோ பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

Related Stories: