சொப்னா தந்த தங்கத்தை நகையாக்கிய கோவை தொழிலதிபர் வீட்டில் ரெய்டு: கொச்சிக்கு அழைத்து சென்று என்ஐஏ விசாரணை

கோவை: கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய சொப்னா கொடுத்த தங்கத்தை நகையாக்கிய கோவை தொழிலதிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கோவை தியாகி குமரன் வீதி அருகே பவிழம் வீதியை சேர்ந்தவர் நந்தகோபால் (43). தொழிலதிபரான இவர், தங்க நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பட்டறை நடத்தி வருகிறார். நந்தகோபாலுக்கும் கேரளாவை கலக்கிய சொப்னா சுரேசிற்கும் தங்க விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. சொப்னாவிடம் அதிகாரிகள் விசாரித்தபோது சில தங்க கட்டிகளை கோவையில் நந்தகோபாலிடம் கொடுத்து அதை ஆபரணமாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளாராம்.

இந்த தகவல் அடிப்படையில் நேற்று காலை 6 மணிக்கு இவர் வீடு மற்றும் பட்டறையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) டி.எஸ்பி. சாகுல் அமீது தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மதியம் 12 மணி வரை நீடித்தது. அங்கிருந்த தங்க கட்டி மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு விசாரித்தனர்.சொப்னா கொடுத்த தங்க கட்டிகள், அதை ஆபரணமாக மாற்றி யாருக்கு விற்பனை செய்யப்பட்டது?, இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார்? என்பது குறித்தும், துபாய், ஷார்ஜா போன்ற பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டு பதுக்கப்படும் தங்க கட்டிகள் குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

பின்னர் கோவை ஹேமில்டன் கிளப் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவரிடம் பல்வேறு தகவல்களை கேட்டனர். இதை தொடர்ந்து நந்தகோபாலை கொச்சியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. நந்த கோபால் முறைகேடாக தங்க கட்டி கடத்தி வந்து பதுக்கி அதை ஆபரணமாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த சோதனையில் நந்த கோபால் வீட்டில் 32 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்ச ரூபாய் சிக்கியது.

முன்னதாக பட்டறையில் வேலை செய்து வந்த 23 தொழிலாளர்களிடமும் அதிகாரிகள் விசாரித்தனர். ஏற்கனவே, நந்தகோபால் 2 ஆண்டுக்கு முன் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  கேரளாவை சேர்ந்த தங்க நகை வியாபாரியான சவுகத் அலி (42) என்பவருடன் ஹவாலா மோசடி, தங்கம் கடத்தல் வழக்கில் கைதான அவர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நந்தகோபாலை தொடர்ந்து மேலும் சில தங்க நகை வியாபாரிகள் மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Related Stories: