அறந்தாங்கியில் குண்டும் குழியுமான சாலை சீரமைக்காவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் எச்சரிக்கை

அறந்தாங்கி: அறந்தாங்கியில் நகரின் முக்கிய சாலையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி நகரின் முக்கிய வர்த்தக பகுதியாக பெரியகடை வீதி உள்ளது. இப்பகுதியில்  தனியார் மருத்துவமனைகளும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இயங்குகிறது. மேலும் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கி, திரையரங்கு, கிளை நூலகம் போன்றவையும் பெரியகடைவீதி, கோட்டை போன்ற முக்கிய பகுதிகளும் உள்ளது. அறந்தாங்கி நகரின் வடக்கு பகுதியில் இருந்தும், பல்வேறு கிராமங்களில் இருந்து பேருந்துகள் மூலம் அறந்தாங்கி பேருந்து நிலையம் வருவோரும், பெரியகடைவீதி, கோட்டை பகுதிக்கு செல்ல அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை என்பதால், அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றி அமைத்தது. அதன்பின்னர் சாலையை பராமரிக்காததால், தற்போது அந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மழையின்போது பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் தெரியாமல் அந்த வழியே நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

மேலும் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் காரைகள் பெயர்ந்துள்ளதால், அதற்கு கீழே உள்ள இரும்பு கம்பிகள் அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை சேதமடையச் செய்கின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:  முக்கிய சாலையான இந்த சாலையை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக பராமரிக்காததால், தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை உடனடியாக சீரமைக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடைபெறும் என்றனர்.

Related Stories: