தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகள்...!! கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் உள்ளன: விழுப்புரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, 2,000 மினி கிளினிக் அமைக்கப்படுவதன் மூலம் மக்கள் மிகுந்த பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், 20-வது மாவட்டமாக இன்று காலை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். முதற்கட்டமாக திருவண்ணாமலையில் ரூ.52.59 கோடியில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 16 துறைகள் சார்பில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். இந்நிலையில் முதற்கட்டமாக விழுப்புரத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

அதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது; மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தேவையான எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியால் தொற்று கட்டுக்குள் உள்ளது.  தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது, மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர் இருப்பார். மினி கிளினிக் திட்டம் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: