போலீசாரின் கவனக்குறைவால் குற்றவாளிகள் விடுதலை அதிகரிப்பு: டிஜிபி கருத்து கூற ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு ஒரு கொலை வழக்கில் சிவகங்கை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கவனக்குறைவாகவும், விருப்பம் போலவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார். உலகளவில் பெயர் பெற்ற தமிழக காவல்துறைக்கு களங்கம் ஏற்படக்கூடாது. ஆனால், தற்போது விசாரணையின் தரம் குறைந்துள்ளது. குற்றவாளிகள் விடுதலையாவது அதிகரித்துள்ளது. எனவே, இந்த வழக்கில், உள்துறை செயலர் மற்றும் டிஜிபி ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது.

குற்ற வழக்குகளில் முறையற்ற விசாரணையால் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலையாகும் நிலையில் எந்த அதிகாரி மீதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இந்த வழக்கில் முறையற்ற விசாரணையால் பாதிக்கப்பட்டோருக்கு ஏன் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கூடாது. இதற்கான பணத்தை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் ஏன் வசூலிக்க கூடாது. முறையற்ற விசாரணையால் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலையாவதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து, கருத்து மற்றும் பரிந்துரைகளை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: