கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம்; நடிகை ராகிணிக்கு 5 நாள் போலீஸ் காவல்: மகளிர் கைதிகள் காப்பகத்தில் தீவிர விசாரணை

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் தொடர்பாக சிக்கிய நடிகை ராகிணிக்கு மேலும் 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் மற்றும் போதை பொருள் விற்பனை தொடர்பாக நடிகை ராகிணி உள்பட 6 பேர் கைதாகியுள்ளனர். இதில் முக்கிய பிரமுகராக ராகிணி கருதப்படுவதால் அவரிடம் இருந்து பல ரகசியங்களை பெறும் முயற்சியில் சி.சி.பி போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதல் 3 நாள் போலீஸ் காவலில் 2 நாட்கள் மட்டுமே விசாரணைக்கு அனுமதி வழங்கினர். ஒரு நாள் உடல் நலக்குறைவு என்று விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இதனால் சி.சி.பி போலீசாரால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. நேற்றுடன் ராகிணியின் போலீஸ் காவல் முடிந்தது. இதையடுத்து போலீசார் அவரை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முதலாவது ஏ.சி.எம்.எம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ராகிணி தனக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை. பெற்றோரை சந்திக்க அனுமதி வழங்கவில்லை. வக்கீலிடம் உறவினர்களிடம் போனில் பேச அனுமதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு சி.சி.பி போலீசார் ராகிணிக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தோம். 4 முறை பெற்றோரை சந்திக்க வாய்ப்பு கொடுத்தோம். அதன் பின்னர் அவரது நடவடிக்கை மாறிவிட்டது.

சரியாக விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எந்த கேள்வி கேட்டாலும், அதற்கு முறையான பதில் அளிக்காமல், உண்மையை மறைக்கும் முயற்சியை மேற்கொண்டார். உறவினர்களிடம் பகலில் மட்டுமே போன் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு, அதிகாலை 2 மணிக்கு சிலர் ராகிணியிடம் பேசவேண்டுமென்று அழைப்பு விடுகின்றனர். அந்த தொலைபேசி அழைப்புகளை எடுப்பது இல்லை. சாட்சிகளை அழிக்கும் முயற்சியிலேயே குறியாக இருக்கிறார். இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்தால், அதற்குள் அனைத்து விவரங்களையும் பெற்று விடுவோம் என்று சி.சி.பி போலீஸ் தரப்பில் கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராகிணிக்கு 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் அதிகளவு செல்போனில் பேசுவதற்கு அனுமதி அளிக்கவேண்டாம். பெற்றோரை பார்க்க ஒரு முறை அனுமதி அளித்தால்போதும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மகளிர் கைதிகள் காப்பகத்தில் உள்ள ராகிணியிடம் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாநாயக் தலைமையிலான மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கால் பதித்துள்ள ராகிணிக்கு, மும்பை, சென்னை, ஐதராபாத்தை சேர்ந்த சில நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அழைத்த விருந்து நிகழ்ச்சியில் நண்பர்களுடன் ராகிணி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் சி.சி.பிக்கு கிடைத்துள்ளது. இதனால் அவரை சென்னை, மும்பை, ஐதராபாத்திற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். தற்போதுள்ள 5 நாள் காவலில் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், 3வது முறை காவலில் எடுக்கும்போது, கண்டிப்பாக அவரை வெளி மாநிலத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.  இதனால் பிற திரையுலகை சேர்ந்தவர்களும் சி.சி.பியில் வலையில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 

Related Stories: