வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசனலம் எதிரொலியாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!!! - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசனலத்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மேலும் 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரபிக்கடலில் தென்கிழக்கு, மத்திய கிழக்கு, தென்மேற்கு, லட்ச தீவு, குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ தொலைவில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளச்சல்-தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை 4.8 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories: