உணவுகளின் நிறமும் ஆரோக்கியமும்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

உணவுகளின் நிறத்துக்கும் ஆரோக்கி யத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. ஓர் உணவை நோக்கி முதலில் நம்மை ஈர்ப்பது அதன்  வண்ணம்தான். உணவுகளின் நிறங்கள், அவற்றின் ஆரோக்கியத் தன்மைகள் அடிப்படையில் அவற்றை 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்கிறார்கள்  உணவியல் நிபுணர்கள். அதுபற்றிப் பார்க்கலாம்...

பச்சை: பச்சை நிற உணவுகள் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றுகின்றன. பச்சைப் பட்டாணி, பச்சை பீன்ஸ், கீரை வகைகள், பச்சை குடைமிளகாய், கிவி, கிரீன் டீ ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் உடலுக்கு நலம் சேர்க்கும். நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

மஞ்சள்: இந்த நிற உணவுகள் உடல் பொலிவுக்கு உதவுகின்றன. வாழைப்பழம், சோளம் போன்றவை இந்த வகை உணவுகள். மஞ்சள் நிற உணவுகளில்  கரோட்டினாய்டு மற்றும் பயோ பிளேவனாய்டு நிறைந்திருப்பதால் எலும்பு மற்றும் பற்களைப் பாதுகாக்கின்றன.

ஆரஞ்சு: இந்த நிற உணவுகள் உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. கேரட், ஆரஞ்சு, பரங்கிக்காய் ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு உகந்தவை. இவை கண்களைப் பாதுகாக்கின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை  வலுப்படுத்துகின்றன.

சிவப்பு: இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்துக்கு  உதவுகின்றன. சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன. இவற்றில் வைட்டமின் சத்துகளும் அதிகமாக உள்ளன. சிவப்பு மிளகாய், சிவப்பு குடை மிளகாய், செர்ரிபழம், தக்காளி, ஆப்பிள் ஆகியவை  இத்தகைய தன்மை கொண்ட சிவப்பு நிற உணவுகளாகும்.

நீலம்: இந்த நிற உணவுகள் நமது ஆயுளை அதிகரிக்கின்றன. வெங்காயம், நாவல்பழம், கத்தரிக்காய், திராட்சை ஆகியவை ஊதா நிற உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் அல்சர் நோயை எதிர்த்துப் போராடுகின்றன. இவை புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகம், மூலம் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன. இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நலம் பயக்கின்றன.

- லதா சம்பத்குமார், குடியாத்தம்