எங்களின் ஸ்பெஷாலிட்டி சாமி விக்ரகங்கள் கருங்காலி மாலைகள் கிரிஸ்டல் கற்கள்

நன்றி குங்குமம் தோழி

பூஜைப் பொருட்கள்

என்றாலே பித்தளைப் பொருட்கள்தான் நம் நினைவிற்கு வரும். காமாட்சி அம்மன் விளக்கில் இருந்து சாமி சிலைகள் என எதுவாக இருந்தாலும் வெள்ளி அல்லது பித்தளையில் வீட்டில் வைத்தால் சுபிட்சத்தை தரும். மேலும் அந்த விக்ரகங்களை பார்க்கும் போதே மனசு லேசான உணர்வினை ஏற்படுத்தும்.

இது போன்ற பூஜைப் பொருட்கள் மட்டுமில்லாமல், வீட்டினை அலங்கரிக்கும் பொருட்களையும் கடந்த ஐந்து வருடமாக விற்பனை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த கணபதி. அம்பத்தூர் மற்றும் இ.சி.ஆர், கொட்டிவாக்கத்தில் அமைந்திருக்கும் இவரின் ‘மகிழ் ஹாண்டி கிராப்ட்ஸ்’ கடையில் எண்ணில் அடங்கா வித்தியாசமான பல கைவினைப் பொருட்கள் குறிப்பாக பித்தளையால் வடிவமைக்கப்பட்டவை உள்ளன.

படிச்சது முதுகலைப் பட்டப்படிப்பு. ஐ.டி துறையில் வேலை. கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால்தான் பார்த்து வந்த வேலையினை ராஜினாமா செய்தார். தன் கவனம் முழுவதையும் தனக்குப் பிடித்த கலைப் பொருட்கள் மேல் செலுத்தினார். தற்போது சென்னையில் இவரின் கலைப் பொருட்கள் மிகவும் பிரசித்தம்.

‘‘அம்பத்தூரை அடுத்து அண்ணனூர் தான் என்னுடைய சொந்த ஊர். சென்னையில்தான் என் பட்டப்படிப்பினை முடித்தேன். எல்லோரையும் போல் நானும் படிப்பு முடிந்ததும் வேலையில் சேர்ந்தேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே கலை சார்ந்த பொருட்கள் மேல் விருப்பம் அதிகம். அதனால் அது சம்பந்தமா பல விஷயங்கள் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்த என் நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் அதைப்போல் வேண்டும் என்று கேட்பார்கள். சிலர் என்னிடம் இருப்பதையே விலை கொடுக்க சொல்வார்கள்.

அப்போது தான் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால், இதனை தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் மற்றும் விரும்பி கேட்பவர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தேன். மேலும் சமூக வலைத்தளங்களிலும் என்னிடம் உள்ள கலைப் பொருட்கள் குறித்து பதிவு செய்தேன். அதைப் பார்த்து பலர் ஆர்டர் செய்ய துவங்கினார்கள். அதன் பிறகுதான் இதையே முழு நேர தொழிலாக செய்யலாம்னு அம்பத்தூரில் சிறிய அளவில் கடை அமைத்து அதில் துவங்கினேன்.

ஆரம்பித்த போது பித்தளை மட்டுமில்லாமல் செம்பு, டெரக்கோட்டா, மரச்சாமான்கள் என அனைத்தும் விற்பனை செய்து வந்தோம். அதன் பிறகு பித்தளைப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து அதனை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த ஐந்து வருடத்தில் தற்போது என் கடையில் பித்தளையில் பூஜைப் பொருட்கள் மட்டுமில்லாமல் அனைத்து கலைப் பொருட்களும் விற்பனைக்காக வைத்திருக்கிறேன்’’ என்றவர் கொட்டிவாக்கத்தில் இரண்டாவது கிளையினை துவங்கியுள்ளார்.

‘‘அம்பத்தூரில் கடையின் அளவு மிகவும் சிறியது என்பதால், அங்கு என்னால் பலதரப்பட்ட பொருட்களை வைக்க முடியவில்லை. மேலும் வாடிக்கையாளர்களும் கடையினை விரிவாக்கம் செய்யச் சொல்லி கேட்டார்கள். நம்முடைய கலையும் கலாச்சாரத்தையும் அடுத்த கட்டத்திற்கு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதால். கொட்டிவாக்கத்தில் பெரிய அளவில் கடையினை திறந்தேன். நான் இந்தத் தொழிலில் ஐந்து வருட காலம் இருந்தாலும், கொட்டிவாக்கத்தில் கடை துவங்கி ஆறு மாதமாகிறது. கடையின் நுழைவாயிலில் செட்டிநாடு தூண்களுக்கு இடையே ஆறு அடி உயரத்தில் பெருமாள் வாடிக்கையாளர்களுக்கு காட்சி தருவது போல் இந்தக் கடையினை வடிவமைத்து இருக்கிறேன்.

ஆரம்பத்தில் அனைத்து கைவினைப் பொருட்கள் இருந்தாலும், பித்தளை பொருட்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க காரணம் வாடிக்யைாளர்கள் தான். பித்தளையில் நிறைய வெரைட்டியை விரும்பினார்கள். பிரம்மா, சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், ஹனுமன் என நிறைய கடவுள்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் பலதரப்பட்ட அவதாரங்களை கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு பிள்ளையாரை எடுத்துக் கொள்ளுங்கள்.

சித்தி புத்தி, நர்த்தன விநாயகர், ஐந்து தலை விநாயகர் என அவருக்கு பல அவதாரங்கள் உண்டு. ஒவ்வொரு அவதாரங்களும் பல சைஸ்களில் இங்குள்ளது. அதனால் பித்தளை ெபாருட்களை மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தேன். இதில் பூஜைப் பொருட்கள், கடவுள் உருவங்கள், மணிகள், விளக்குகள் எல்லாமே உண்டு. இதைத் தவிர கருங்காலியில் மாலை, பிரேஸ்லெட், சுவாமி சிலைகள் என அனைத்தும் ஒரிஜினலாக கிடைக்கும்.

நான் என் இன்ஸ்டா பக்கத்தில் கருங்காலி மரங்களில் இருந்து எவ்வாறு இவை வடிவமைக்கப்படுகின்றன என்பதை பதிவு செய்திருந்தேன். அதைப் பார்த்து பல மாநிலங்களில் இருந்து மக்கள் நேரடியாகவே வாங்க வரத் துவங்கினார்கள். இதைத்தவிர கிரிஸ்டல்களிலான டைகர் ஐ, அமிதிஸ்ட், பைரேட் போன்ற பிரேஸ்லெட்களும் உள்ளன. இவற்றை செமி பிரஷியஸ் கற்கள்னு சொல்வாங்க. இந்த கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட எனர்ஜியுண்டு.

நம் கையில் காசு தங்க மணி மேக்னட் கல்லினாலான பிரேஸ்லெட் அணியலாம். அதே போல் உறவுகளை பலமாக்க, கோவத்தை குறைக்க, கவனம் சிதறாமல் இருக்க, உடல் எடை குறைய என ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட கிரிஸ்டல் கற்கள் உள்ளன. சிலர் கண்ணாடியினை கிரிஸ்டல்கள் போல் வடிவமைத்து ஏமாற்றுவார்கள். நாங்க அந்த கற்களுக்கு சான்றிதழுடன் கொடுக்கிறோம். மேலும் இவை உண்மையான கிரிஸ்டல் கற்கள் தானா என்று முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் அதனை விற்பனைக்கே கொண்டு வருவேன்’’ என்றவர் இதற்காக பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளார்.

‘‘வித்தியாசமான கைவினைப் பொருட்களுக்காக பெங்களூர், ஹரியானா, தில்லி, மேற்கு வங்காளம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்வேன். நாம் ஒரு பொருளை நியாயமாக விற்பனை செய்யும் போது அந்த பொருளின் தரம் உண்மையாக இருக்க வேண்டும். அதனால் அவை அனைத்தும் தயாரிக்கப்படும் இடத்திற்கு நேரடியாக சென்று பார்ப்பேன். அவை அனைத்தும் ஒரு மாதம் என்னுடைய தனிப்பட்ட ஆய்வில் இருக்கும். அதன் தரத்தை முழுமையாக அலசி ஆராய்ந்து அது உண்மையானது என்று தெரிந்த பிறகு தான் விற்பனைக்கே வைப்பேன். முதலில் நான் பித்தளையில்தான் உருவங்களை விற்பனை செய்தேன்.

அதனை தொடர்ந்து விளக்குகளை கொண்டு வந்தேன். பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அதற்கு ஏற்ப பொருட்களை வாங்குவேன். சில வித்தியாசமான பொருட்கள் எனக்கு பிடிக்கும் என்பதால், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினேன். ஆரம்பத்தில் மெஷின்மேட் பொருட்கள் தான் கிடைத்தது. அதுவே கைகளால் வடிவமைக்கப்படும் போது அந்தப் பொருட்களுக்கு தனிப்பட்ட வைப்ரேஷன் உண்டு.

குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு சில பொருட்கள் செய்வது தெரியவந்து, அவை உற்பத்தியாகும் இடத்திற்கே சென்று வாங்கி வர ஆரம்பித்தேன். அதில் விண்ட்சைம், குஜராத்தில் ஒரு கிராமத்தில் குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படும் இதில் இருந்து வெளியாகும் ஒலியும் வித்தியாசமா இருக்கும். அதே போல் கருங்காலி மாலைகள் ஹரியானா, ஜெய்ப்பூரில் ஒரு கிராமத்தில் செய்றாங்க’’ என்றவர் கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் பலன்களை கூறினார்.

‘‘கருங்காலி மாலை மார்க்கெட்டில் காலம் காலமாக இருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் அணிய துவங்கிய பிறகு தான் மக்கள் மத்தியில் பிரபலமானது. வேப்ப மரம், ஆலமரம் போல் இதுவும் மருத்துவ குணம் நிறைந்த மரம். இதில் காஸ்மிக் எனர்ஜி அதிகமா இருப்பதால், பாசிடிவ் எண்ணத்தை கொடுக்கும். கண் திருஷ்டிக்கும் நல்லது. அதனால்தான் அந்த காலத்தில் முனிவர்கள் இந்த மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து வந்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் மாலைகளை விரும்பினாலும், இதில் பிரேஸ்லெட், வாக்கிங் ஸ்டிக், வேல், சாமி சிலைகள், தாயத்து, டாலர் என அனைத்தும் உள்ளது. பித்தளையில் ஒரு இஞ்ச் முதல் ஆறு அடி வரைக்கும் சிலைகள் உள்ளன. அதில் ஹிந்து கடவுள் சிலைகளில் அனைத்து அவதாரங்களும் உள்ளன. இவைத் தவிர கோமாதா, சுவரில் மாட்டக்கூடிய அலங்கார பொருட்களும் கிடைக்கும். பித்தளை மட்டுமில்லாமல் செம்பிலும் ஒரு இஞ்ச் முதல் 7 இஞ்ச் வரை சாமி சிலைகள் உள்ளன.

ஒரு விக்ரகம் மார்க்கெட்டில் வருகிறது என்றால் அதை உடனே வாங்கிவிட மாட்டேன். அதன் அமைப்பு சரியாக உள்ளதா, ஏதும் பழுது இருக்கிறதா? குறிப்பாக சிலைகளின் முக அமைப்பு மிகவும் முக்கியம். எல்லாவற்றையும் விட தரமாக இருக்க வேண்டும். அப்படியுள்ள விக்ரகங்களை மிகவும் நுட்பமாக பார்த்து தான் வாங்குவோம். கிரிஸ்டல்களில் பல வகைகள் உள்ளன. அதில் உடல் சூட்டை தணிக்கக் கூடிய ஸ்படிக மாலைகளை பலர் விரும்புகிறார்கள்.

மேலும் சிங்கிங் பவுல், விண்ட் சைம்ஸ் போன்றவை பாசிடிவ் வைப் ஏற்படுத்தும், ஸ்ட்ரெசை குறைக்கும். இதுபோன்ற மனதை ரிலாக்ஸ் செய்யக்கூடிய பொருட்களையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதுதான் என்னுடைய முக்கிய நோக்கம். நேரடியாகவோ அல்லது இணையம் மூலமாகவும் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை வாங்க முன் வருகிறார்கள்’’ என்ற கணபதி சென்னையில் மற்றொரு கிளை, தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் கிளைகள் திறக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.

தொகுப்பு: ப்ரியா

The post எங்களின் ஸ்பெஷாலிட்டி சாமி விக்ரகங்கள் கருங்காலி மாலைகள் கிரிஸ்டல் கற்கள் appeared first on Dinakaran.

Related Stories: