கொரோனா பீதி திருமூர்த்திமலை வெறிச்சோடியது: கடையை காலி செய்த வியாபாரிகள்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் திருமூர்த்தி அணையும்,  மலையின் மேல் பகுதியில் பஞ்சலிங்க அருவியும், அமணலிங்கேஸ்வரர் கோயிலும் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாக விளங்கி  வரும் திருமூர்த்தி மலைக்கு வாரவிடுமுறை,அரசு விடுமுறை,கோடை கால விடுமுறை தினங்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்  அதிகளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமலானது.பொது போக்குவரத்துக்கு தடை,பள்ளி,கல்லூரிகள்,கோயில்கள் திறக்க தடை என முழு அளவிலான ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள்  களைஇழந்தன.திருமூர்த்தி மலை மீது கோயில் பக்தர்களுக்காக பூஜை பொருட்கள், சுற்றுலா பயணிகளுக்காக ஓட்டல்கள்,பேக்கரி,டீ ஸ்டால் மற்றும் மலை வாழ்  மக்கள் நாவல்பழம்,இலந்தப்பழம்,காட்டுநெல்லி,விளாம்பழம் உள்ளிட்டவற்றை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர். கடந்த 5  மாதமாக கடைகள் திறக்காத நிலையில் வேறு வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.

இந்நிலையில் கோயில்கள் திறக்க அரசு உத்தரவிட்ட போதும், சுற்றுலாத்தலங்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவித்து இருந்தது. இதனால்  பஞ்சலிங்க அருவி,திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் போனது.மேலும் மாவட்டத்திற்குள் மட்டுமே அதுவும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு  கூட பக்தர்கள் வருகை பெரிய அளவில் இல்லை. மேலும் அரசின் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் பூஜை பொருட்கள் எதையும் கோயிலுக்கு வாங்கி  செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால் திருமூர்த்தி மலை மீது கடை வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையை காலி செய்து  விட்டு தினக்கூலித் தொழிலுக்கு சென்று விட்டனர். 7ம் தேதிக்கு பின்னர் பொது போக்குவரத்து முழுமையாக இயங்கத் துவங்கும், மேலும்  சுற்றுலாத்தலங்களுக்கான தடை நீங்கினால் மட்டுமே கோயிலை சுற்றிஉள்ள கடைகளை திறக்க முடியும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: