சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை: திடீர் மூச்சு திணறலால் உயிரிழப்பு ஏற்படும் அவலம்

சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால், திடீர் முச்சு  திணறலுக்கு உள்ளாகும் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருக்கிறது. தினமும் 300 முதல் 400க்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.  5க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனா நோயாளிகளை சேர்த்து சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் இடமில்லை. அதிக மூச்சு  திணறலுக்கு ஆளாகும் கொரோனா நோயாளிகளை மட்டுமே அரசு மருத்துவமனைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல், தனியார்  மருத்துவமனைகளிலும் போதிய படுக்கைகள் இல்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், எங்கு சென்று சிகிச்சை பெறுவது என தவித்து  வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தற்காலிக  சிகிச்சை மையங்களை அமைத்து வருகின்றனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, சேலம் கோரிமேடு, வாழப்பாடி,  ஆத்தூர் என 16 இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையங்களிலும் 100 முதல் 400 வரையிலான கொரோனா  நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையங்களில் மருத்துவக்குழுவினரும் இருக்கின்றனர். அவர்களின் அறிவுறுத்தல் படி நோயாளிகளுக்கு உரிய உணவு, மருந்து, மாத்திரைகள்  வழங்கப்படுகிறது. இருப்பினும் இம்மையங்களில் அவசர தேவைக்கு என ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால், அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளில் யாருக்கேனும் திடீரென மூச்சுத்திணறல் அதிகளவு ஏற்பட்டால், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அதுவும்  இம்மையத்தில் ஒரே ஒரு ஆம்புலன்சை மட்டுமே நிறுத்தி வைத்திருக்கின்றனர்.சேலம் கருப்பூர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நேற்று முன்தினம், கொரோனாவால் அனுமதிக்கப்பட்டிருந்த பயிற்சி  எஸ்ஐக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை அங்கிருந்து ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்வதற்குள் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுவே அந்த மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டருடன் ஒரு அறையை மட்டுமாவது சிகிச்சை இடமாக  வைத்திருந்தால், அவரின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என அங்குள்ள இதர கொரோனா நோயாளிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம், மூச்சு திணறலுக்கு ஆளான பயிற்சி எஸ்ஐயை ஆம்புலன்சில் கொண்டு சென்ற அதேநேரத்தில், மற்றொரு பயிற்சி  எஸ்ஐக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேறு ஆம்புலன்சும் அங்கில்லை. இதனால், வெளியில்  இருந்து அவசரமாக ஒரு ஆம்புலன்சை வரவழைத்து, தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு  தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், ‘‘மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தற்காலிக சிகிச்சை  மையங்களில் அவசர உதவிக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்படவில்லை. இதனால், திடீரென மூச்சு திணறலுக்கு உள்ளாகும் பல நோயாளிகள்  இறக்கின்றனர். ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை ₹6 ஆயிரம் முதல் ₹8 ஆயிரம் வரையில் விற்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு மையத்திலும்  குறைந்தது 20 ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மையங்களில் இத்தகைய அவசர சிகிச்சைக்காக ஒரு அறையாவது தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். எவ்வித அவசர மருத்துவ  தேவைக்கான ஏற்பாடுகளும் இல்லாமல் தான், இம்மையங்களை மாவட்ட சுகாதாரத்துறை பராமரிக்கிறது. நோயின் தீவிரம்,இறப்பு அதிகரிப்பை  அறிந்து,இனியாவது நோயாளிகளின் உயிரைக்காக்க உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும்,’’என்றனர்.

Related Stories: