சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கையை மொழிபெயர்க்கும் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

புதுடெல்லி: ‘‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கையை தமிழ் உட்பட 22 பிராந்திய மொழிகளில் வெளியிடுவது சாத்தியமில்லாத ஒன்று. இதனால் இததொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும்’’ என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தொடர்பான விதிமுறைகள் 2006ல் சில திருத்தங்களைச் செய்து கடந்த மார்ச் 23ம் தேதி புதிய வரைவறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதில் உள்ள பெரும்பாலான அம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ‘‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சட்டத் திருத்த புதிய விதிகளின் வரைவு என்பது, நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மீதான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதனால் தமிழ் உட்பட பிராந்திய மொழிகளோடு சேர்த்து மொத்தம் 22 மொழிகளில் இதனை மொழிபெயர்த்து, 10 நாட்களுக்குள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும். அதேப்போல் ஆகஸ்டு 11ம் தேதி வரை இதுதொடர்பான கருத்துக்களை கேட்க பொதுமக்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்’’ என கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு விவகாரத்தில், தமிழ் உட்பட மொத்தம் 22 பிராந்திய மொழிகளில் வரைவறிக்கை வெளியிட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்பதால், இதுகுறித்து வழங்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிராந்திய மொழிகளில் வரைவறிக்கை வெளியிடும் விவகாரத்தில் எந்த சமரசத்தையும் நாங்கள் ஏற்க விரும்பவில்லை’ என நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: