கர்நாடக ஆலைகள் ரசாயன கழிவுகளை கலப்பதால் கெலவரப்பள்ளி அணையில் பொங்கி ததும்பும் நுரை..!! விவசாயிகள் அச்சம்!!!

ஓசூர்: கர்நாடக ஆலைகள் ரசாயன கழிவுகளை கலப்பதால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் நுரை ததும்பி ஓடுவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் நீருடன் சேர்ந்து நுரையும் கெலவரப்பள்ளி அணையில் சங்கமமாகிறது. கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் தண்ணீர் அளவும் அதிகரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடுகிறது. இந்த தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளும் கலந்து வருவதால் தண்ணீர் கருப்பு நிறத்தில் அதிக அளவு நுரையுடன் பாய்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே மலை போல் குவிந்து நிற்கின்றன.

இதனால் கெலவரப்பள்ளி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களிலும் நுரை பொங்கி நிற்கிறது. அதே நேரத்தில் அணையில் தேங்கியுள்ள நீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது கர்நாடக ஆலைகள் ரசாயன கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடுவதே இதற்கு முக்கிய காரணம் என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனையடுத்து கெலவரப்பள்ளி அணை நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால், விளைநிலங்கள் பெரிதளவு பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் கர்நாடக ஆலைகள் ரசாயன கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: