வாக்கிங் சென்ற கிராம உதவியாளரை கஞ்சா போதையில் அடித்து கொலை செய்த கும்பல்: பரபரப்பு வாக்குமூலம்

தாம்பரம்: பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் ராஜ் (52). இவர், பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், அலுவலருக்கு உதவியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தின், பின்னால் நடைப்பயிற்சிக்கு சென்றவர், ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவில் 5 பேர் கொண்ட கும்பல் நடந்து சென்றது தெரியவந்தது. சங்கர் ராஜ் செல்போன் சம்பவ இடத்தில் இல்லாததால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த செல்போன் எண் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர். அதில், பெருங்களத்தூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (29) என்பவர் செல்போனை வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, பிரவீன்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கடந்த 2017ம் ஆண்டு தன் நண்பனை கொலை செய்த வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்தது தெரியவந்தது. மேலும், பிரவீன்குமார் அவரது நண்பர்களுடன், சிறுவர் பூங்காவில் கஞ்சா புகைத்து, மது அருந்தி கொண்டிருந்தபோது, நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கர் ராஜ், தங்களை முறைப்பதாக நினைத்துக்கொண்டு கஞ்சா, மது போதையில் அவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை துரத்தி சென்று கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, கொலை செய்ய பிரவீன்குமாருக்கு உடந்தையாக இருந்த பெருங்களத்தூர் அப்பு (எ) கிளி (30), புது பெருங்களத்தூர் வெற்றிவேல் (26), சக்திவேல் (45), புதுபெருங்களத்தூர் எம்கேபி நகர் ஆபிரகாம் தெருவை சேர்ந்த முத்து (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: