மக்களை மேலும் வேதனைப்படுத்தும் சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் : டிடிவி தினகரன் கோரிக்கை!!

சென்னை : மக்களை மேலும் வேதனைப்படுத்தும் சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 21 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களின் தரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப்.1) தன் ட்விட்டர் பக்கத்தில், கரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், கரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்ட முடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: