வண்டலூரில் மாநில தலைவர் முருகன் தலைமையில் விழா பாஜவில் இணைய வந்த 4 ரவுடிகள் சிக்கினர்: பாஜ பிரமுகர் காரில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் பிரபல ரவுடி தப்பினார்

செங்கல்பட்டு: வண்டலூரில் மாற்று கட்சியில் இருந்து பாஜவில் இணையும் விழா, தலைவர் முருகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்த 4 ரவுடிகளை போலீசார் பிடித்தனர். பிரபல ரவுடி பாஜ மாநில பொதுச்செயலாளரின் காரில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் தப்பினார். தமிழக பாஜவில் அண்மைக்காலமாக ரவுடிகள் சேர்ந்து வருகின்றனர். வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த கல்வெட்டு ரவி மற்றும் சத்யா (எ) சத்தியராஜ் ஆகியோர் பாஜவில் இணைந்தனர். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவி (எ) கல்வெட்டு ரவி மீது 6 கொலை உள்பட 35 வழக்குகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அடங்குவதற்குள் வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மாற்று கட்சியினர், பாஜவில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். இதில் பாஜ தொண்டர்கள் பலரும் வந்திருந்தனர்.

விழாவில், பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா மற்றும் அவரது ஆதரவாளர்களும் இணைவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விழா நடந்த இடத்திலும் விசாரித்தனர். விழா மேடை அருகே போலீசார் சென்றபோது, தொண்டர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாஜ தலைவர் எல்.முருகன், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அதேநேரத்தில், போலீசாரை கண்டதும் ரவுடி நெடுங்குன்றம் சூர்யா, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் வந்த மாநில பொதுச் செயலாளர் ஒருவரின் காரில் ஏறி தப்பினார். இதனால் போலீசார் ரவுடியை கைது செய்யமுடியாமல் தவித்தனர். பின்னர், அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 6 பேரை பிடித்த போலீசார், அவர்கள் வந்த காரில் சோதனை செய்து பார்த்தபோது அதில் சிறிய அளவு கத்தி ஒன்று இருந்தது. இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர்கள் ருக்மானந்தன் (20), யுகா ஆதித்யன் (22), சரத் (எ) சரத்குமார் (29), ஜோசப் பெஞ்சமின் (20), அன்பரசு (28), பிரபாகரன் (35) என தெரியவந்தது.

6 பேரை போலீசார் பிடித்து வந்ததால், 50க்கும் மேற்பட்ட பாஜவினர் காவல் நிலையத்திற்கு சென்று அவர்களை விடுவிக்கக்கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, போலீசாரிடம் கேட்டபோது, ‘‘நெடுங்குன்றத்தை சேர்ந்த பிரபல குற்றப்பதிவேடு ரவுடி சூர்யா (33) என்பவன் மீது பீர்க்கன்காரணை, சேலையூர், ஓட்டேரி, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பாஜ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சூர்யாவை பிடிக்க முயற்சித்தோம். ஆனால் அதற்குள் அவர் பாஜ மாநில பொதுச் செயலாளர் ஒருவரின் காரில் ஏறி சென்று விட்டான். இதனால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: