ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறைக்கு மாநிலங்களை ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க சொல்வது நியாயமற்ற சிந்தனை: தேவகவுடா கருத்து

பெங்களூரு: ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறைக்கு மாநிலங்கள் ரிசர்வ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருப்பது நியாயமற்ற சிந்தனை என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். 41-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் கடவுளின் செயலால் உருவான கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.65 ஆயிரம் கோடியை செஸ் மூலம் ஈட்டினாலும், ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க ரூ.97 ஆயிரம் கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி தற்போது இழப்பீடு தர முடியாது, ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறுங்கள் என மாநில அரசுகளிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அனைத்து மாநிலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே இருக்கும் உறவு ஏற்கெனவே சிக்கலாக இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்துக்குப் பின் இன்னும் மோசமடைந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி வருவாயில் ரூ.2.35 லட்சம் கோடி பற்றாக்குறை இருப்பதால் இழப்பீடு வழங்க இயலாது. ஆதலால், மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்த ஆலோசனை சரியானது அல்ல.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள் தங்கள் வரிவிதிக்கும் உரிமையை கைவிட்டுவிட்டு, ஜிஎஸ்டி வரி முறைக்கு வந்துவிட்டன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வரி வருவாயில் ஏற்படும் இழப்புகளுக்குப் போதுமான இழப்பீடு தரப்படும் என மத்திய அரசு உறுதியளித்ததால் தான் ஜிஎஸ்டி வரி முறைக்கு மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. மாநிலங்களுக்குத் தேவையான கடன் வழங்குவதற்கும், இழப்பை ஈடு செய்யவும் மத்திய அரசுக்குத்தான் பொறுப்பு இருக்கிறது. பொறுப்பை சுருக்கிக்கொள்ள முடியாது என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.

Related Stories: