நெல்லையில் புதிதாக கட்டிய ஓடையில் வெளியேறும் கழிவுநீர்: வாகனஓட்டிகள் அவதி

நெல்லை: நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் அருகே இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் இரு பகுதியிலும் கழிவுநீர் ஓடை சீராக இல்லாததால் அதிலிருந்து அடிக்கடி கழிவுநீர் சாலை பகுதியில் பெருக்கெடுத்து வந்தது.  குறிப்பாக மழை நேரங்களில் இந்த சாலை முழுவதும் கழிவுநீரும் மழை நீரும் தேங்கி போக்குவரத்தை முடக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இங்கு தரமான கழிவுநீரோடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இச்சாலையில் புதிதாக கழிவு நீரோடை சமீபத்தில் கட்டப்பட்டது.

இதனால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். தற்போது மீண்டும் கழிவுநீர் வெளியேறுவது தொடர்கிறது. குறிப்பாக புதிதாக ஓடை அமைக்கப்பட்ட இடத்தில் மையப்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் மீண்டும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதியை   பார்வையிட்ட மாநகராட்சியினர் தற்காலிகமாக தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்காக  மண்ணை தடுப்பு அணை போல் வைத்துச் சென்றுள்ளனர். இந்த மண் மீண்டும் ஓடைக்குள் கரைந்து செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தாமதமின்றி இந்தக் கழிவு நீரோடையை மீண்டும் தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: