போடி மீனாட்சிபுரத்தில் குப்பைக் கிடங்கான உரம் தயாரிப்பு பூங்கா: தீ வைப்பதால் குடியிருப்புவாசிகள் அவதி

போடி: போடி அருகே மீனாட்சிபுரத்தில் உரம் தயாரிக்கும் வளம் காக்கும் பூங்காவில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால், புகை மண்டலம் உருவாகி குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். போடி அருகே, மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலும் விவசாயிகளாகவும், கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இந்நிலையில், மீனாட்சிபுரத்தில் சேகரிக்கும் குப்பைகளை மீனாட்சி அம்மன் கண்மாய் பகுதி குப்பைக் கிடங்கில் கொட்டி வந்தனர். இந்நிலையில், மீனாட்சிபுரம்-விசுவாசபுரம் சாலையில் அம்மாபட்டி விலக்கில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் வளம் காக்கும் பூங்கா அமைக்கப்பட்டது.

இங்கு விவசாயிகளுக்கு இயற்கை உரம், மண்புழு உரம், ஆடு மாடுகளுக்கு தேவையான இயற்கை உணவுகள் தயாரிக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் இந்த பூங்கா குப்பை கொட்டும் தொட்டியாக மாறியது. பேரூராட்சி பணியாளர்கள் தினசரி குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதிலிருந்து கிளம்பும் புகையால் அருகில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மீனாட்சிபுரத்தில் வளம் காக்கும் பூங்காவில் குப்பைகளை கொட்டாமல், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: