நெல்லையில் காதல் ஜோடியிடம் வழிப்பறி பெருமாள்புரம் போலீஸ் அதிகாரி தப்பவிட்ட ரவுடியை கமிஷனரின் தனிப்படை மடக்கியது: தினகரன் செய்தி எதிரொலியால் நடவடிக்கை

நெல்லை: பாளை. அருகே ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை மலைப்பகுதியில் கடந்த 1ம் தேதி பைக்கில் நின்றிருந்த இளம் காதல் ஜோடியை அரிவாளை காட்டி மிரட்டி மூன்று பேர் செல்போனில் போட்டோவும், வீடியோவும் எடுத்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.2,500, ஏடிஎம் கார்டு மூலம் ரூ.3 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும் வழிப்பறி கொள்ளையர்கள் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு இளம் காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர். அதை ஏற்காததால் காதல் ஜோடியை எடுத்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இதுகுறித்து பாளை. பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த அருணாசலம், சீவலப்பேரி அருகே மறுகால்தலையைச் சேர்ந்த பூல்பாண்டி (25), முத்துக்குமார் (43) ஆகிய மூன்று பேரை தேடி வந்தனர்.  பின்னர் அருணாசலத்தையும், பூல்பாண்டியையும் போலீசார் பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து லாக்கப் முன்னால் நிற்கவைத்து போட்டோவும் எடுத்தனர். ஆனால், 2 வக்கீல்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பூல்பாண்டியை காவல் நிலைய போலீஸ் அதிகாரி தப்பவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இது பற்றிய செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 25ம் தேதி படத்துடன் வெளியானது.

இதையடுத்து, இது பற்றி பெருமாள்புரம் போலீசாரிடம் விசாரணை நடத்திய கமிஷனர் தீபக் டாமோர் தப்பிய ரவுடி பூல்பாண்டியை பிடிக்க தனிப்படையை அமைத்தார். இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த மற்றொரு குற்றவாளி முத்துக்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி பூல்பாண்டியை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பாளை. மறுகால்தலை காட்டுப் பகுதியிலுள்ள பாழடைந்த மண்டபத்தில் பதுங்கியிருந்த பூல்பாண்டியை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து அரிவாள், பைக், இரு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூல்பாண்டியை பாளை. குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்த தனிப்படையினர், கடந்த 2015ல் சுத்தமல்லியில் போலீசால் என்கவுன்டர் செய்யப்பட்ட கிட்டு என்ற கிட்டப்பாவின் கல்லறையில் பூல்பாண்டியும், அவரது ஆதரவாளர்களும் சபதம் செய்தது குறித்தும், அவற்றின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக உளவுத் துறையினரும் விசாரித்தனர். பின்னர் பூல்பாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் நேற்றிரவு போலீசார் அடைத்தனர். பூல்பாண்டி மீது 21 வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: