திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக தொண்டன் சொல்வதை செய்யாத கலெக்டர் பணிபுரிய முடியாது: மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி வருகிறார். அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய அதிமுக நகர செயலாளர் ஜெ.செல்வம், ஆளும்கட்சியாக இருந்தும் நாம் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், `அதிமுகவில் இருக்கிற அடிமட்ட தொண்டன், கட்சி வேட்டியை கட்டியிருக்கிற சாதாரண தொண்டன் ஒரு தகவலை சொன்னால்கூட, அதை இந்த மாவட்டத்தில் இருக்கிற ஆட்சித்தலைவராக இருந்தாலும், மாவட்ட காவல்துறை எஸ்பியாக இருந்தாலும், நகராட்சி ஆணையாளராக அல்லது பொறியாளராக இருந்தாலும் செய்ய வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. அந்த உத்தரவுக்கு கட்டுப்படாத எந்த அதிகாரியாக இருந்தாலும் இந்த மாவட்டத்தில் பணிபுரிய முடியாது என்பதை தெரிவிக்கிறேன்’’ என்றார். திருவண்ணாமலை யில் வரும் 4ம் தேதி நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ள நிலையில், முன்னாள் அமைச்சரின் இந்த மிரட்டல் பேச்சு, அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: